×

கள்ளக்காதலனுடன் மனைவி எரித்து கொலை கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில் வேல்முருகன் (38). இவரது மனைவி இவரை பிரிந்து, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடன் வசித்துள்ளார். இதனால் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தசாமி மீது செந்தில் வேல்முருகனுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2020 ஜூன் 3ம் தேதி மனைவி இருந்த வீட்டுக்கு சென்ற செந்தில் வேல்முருகன் அங்கிருந்த மனைவி மற்றும் கோவிந்தசாமியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் கொண்டுவந்த பெட்ரோலை இருவர் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்து பின்னர் இறந்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரணை நடத்தி செந்தில் வேல்முருகனை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பாருக் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் செந்தில் வேல்முருகனுக்கு இரண்டு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதமாக ரூ.20 ஆயிரம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post கள்ளக்காதலனுடன் மனைவி எரித்து கொலை கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Women's Court ,Senthil Velmurugan ,MGR Nagar ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...